" இருப்பாய் தமிழா நெருப்பாய்! இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!". தமிழா தமிழா நாளை நம் நாளேதமிழா தமிழா நாடும் நம் நாடேதமிழா தமிழா நாளை நம் நாளேதமிழா தமிழா நாடும் நம் நாடேஎன் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடாஎன் நாமம் இந்தியன் என்றே
Search This Blog
Thursday, August 21, 2014
சித்திரவதை: ஓர் உளவியல் பார்வை.
போரில் தோற்றுபோன எதிரி நாட்டு வீரனை சிங்கத்தின் எதிரில் தள்ளி, அவன் அதனோடு போராடி, அடிபட்டு, மிதிபட்டு, கடிபட்டு, காயம் பட்டு, சித்திரவதைக்கு ஆளாகி செத்து மடிவதை ஏதோ ஒரு விதமான கேளிக்கையாக பார்த்து மகிழ்ந்த ரோமானியர்கள். கொல்லை, கொலை, கற்பழிப்பு, ராஜ துரோகம் மாதிரியான தவறுகளை செய்த ஆண்களை நடுதெருவில் நிறுத்தி மாறுகால், மாறுகை வாங்கும் அரேபியர்கள். வேதம் ஓதுவதை தற்செயலாக கேட்டு விட்டாலும், பெண்கள், அடிமைகள், சூத்திரர்கள் மாதிரியான ~கீழ்நிலைகாரர்களின்~ காதில் ஈயத்தை காய்த்து ஊற்ற வேண்டும் என்று போதித்த ஆரியர்கள்.அரசுக்கு எதிராக பேசினால் அவனை பைத்தியம் என்று பட்டம் கட்டி, சிறையில் அடைத்து, தனிமையில் அவனை போட்டு வாட்டி வதைக்கும் அந்த கால ருஷ்யர்கள், அவ்வளவு ஏன் - அரசுக்கு எதிராக பேசினாலோ எழுதினாலோ, ~செடிஷன்~ என்று பழி போட்டு, அந்தமான் சிறை, ஆஸ்திரேலியா சிறை என்று நாடுகடத்தி, கஷ்டபடுத்திய ஆங்கிலேயர்கள், அவர்கள் போன பிறகும், ~ரொம்ப பேசின, உன்னை உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்டி எடுத்து, தோச்சி தொங்கவிட்டுடுவேன்~ என்று தயங்காமல் மிரட்டும் அநேக தேசங்களின் காவல் துறைகள் என்று எல்லா காலத்திலும் மனிதர்களுள் இப்படிபட்ட கோரமான இந்த வன்முறை குணம் வெளிபட்டுக்கொண்டே தான் இருக்கிறது. அதன் உச்சகட்ட வெளிபாடான சித்திரவதையும் நடந்துக்கொண்டே தான் வந்திருக்கிறது.மனிதர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்? மற்ற மிருகங்களும் இப்படி எல்லாம் நடந்துக்கொள்வதுண்டா என்று சற்றே திரும்பி நம் சக ஜீவராசிகளின் நடத்தையை கொஞ்சம் நோட்டம் விட்டால், ஆட்சர்யம் ஆனால் உண்மை….வேறு எந்த ஜீவராசியும் தன் இனத்தை சேர்ந்த பிறரை இப்படி எல்லாம் இம்சிப்பதே இல்லை. என்ன தான் ஆக்ரோஷம், போட்டி, பஞ்சம் என்று வந்தாலும், எந்த ஆண் சிங்கமும் பிற ஆண் சிங்கங்களை சித்திரவதை செய்வதில்லை. சிங்கம் மட்டுமல்ல, நடப்பன, நீந்துவன, பறப்பன, ஊர்வன, என்று சகல விதமான ஜீவராசிகள் அனைத்திலுமே இப்படிப்பட்ட சித்திரவதை குணம் இருப்பதே இல்லை. ஆஃப்டரால் மிருகம் என்று நாம் அசட்டை செய்யும் இத்தனை கோடி ஜீவராசிகளில் எவையுமே இப்படி சித்திரவதை செய்யவில்லை, ஏன் தெரியுமா? காரணம் இந்த விலங்குகளுக்குள் ஒரு எழுதப்படாத சட்டம் இது: உன் இனத்தை சேர்ந்தவரை நீ துன்புறுத்தவே கூடாது. ஏதாவது போட்டி என்றால், பலபரிட்சை செய்து யார் பெரியவன் என்று மோதிப்பார்க்கலாம், அப்போதும், எதிராளி, ~சரி, போதும், இனி முடியாது. நான் தோற்றுவிட்டேன், ஒத்துக்குறேன், ஆளை விடு~ என்ற சமிக்ஞை செய்தால் உடனே `பிழைத்து போ~ என்று பெருந்தன்மையாய் விட்டு போய்விட வேண்டும். அதற்கு மேலும் கொக்கறித்துக்கொண்டிருக்கவோ, ஓவராய் இம்சிக்கவோ கூடாது..- இது தான் உலக ஜீவராசிகள் அனைத்துக்கும் பொதுவான விதி. இந்த விதியை மீறினால் மிருகங்களின் ஜனத்தொகை அபாயகரமான அளவிற்கு குறைந்துபோக நேரிடும் என்பதினால் இயற்கை இந்த விதியை மிகவும் ஆழமாய் இந்த மிருகங்களின் மூளையில் பதித்திருக்கிறது. அதனால் இந்த மிருகங்கள் இந்த விதியை மீறுவதே இல்லை, என்ன தான் சண்டை என்றாலும், எதிராளி, “சரண்டர்” என்ற சமிக்ஞையை தெரிவித்ததுமே சமாதானமாகி, சாந்தமாக பிரிந்துப்போய்விடுகின்றன.ஆனால் எந்த விதியாக இருந்தாலும், அதற்கு மசியாத சில தருதலை கேசுகளும் இருக்கத்தானே செய்யும். அப்படி இந்த விதியையும் மதிக்காத இரண்டு மிருகங்கள் உண்டு. ஒன்று மானுடமாகிய நாம், மற்றொன்று நம்முடைய மிக நெருங்கிய உறவான சிம்பான்சி குரங்குகள். இந்த இரண்டு ஜீவராசிகளில் மட்டும் தான் தன் இனத்தை சேர்ந்தவர்களையே சித்திரவதை செய்து பார்க்கும், இந்த விசித்திரமான பழக்கம் இருக்கிறது.அது ஏன் இப்படி, இந்த இரண்டு வானரங்கள் மட்டும் இப்படி இயற்கையின் விதிக்கு மாற்றாக செயல் படுகின்றன என்று நுனுக்கமாக பார்த்தால், பல விஷயங்கள் தெளிவாகின்றன. இந்த இரண்டு ஜீவராசிகளுக்கு மட்டும் தான் இதற்கு அடிப்படையான சில தன்மைகள் இருந்தன. அவை (1) தலைவன், தொண்டன் என்ற ஆளுமை நிலைகள் (2) தலைவன் அந்த இடத்தில் இல்லாவிட்டாலும் அவன் ஆணைபடி நடக்கும் தொண்டர் குணம் (3) தலைவன் என்ன சொன்னாலும், செய்தாலும், ஏன் எதற்கு என்று சுய அறிவை பயன்படுத்தி எதிர் கேள்வி கேட்காமல், அப்படியே அடிபிரளாமல் காபி அடிக்கும் தொண்டரின் தன்மை (4) தன் இனத்தை சேர்ந்தவர்களையே ‘நம்ம ஆள்” (ingroup), “வெளி ஆள்” (out group) என்று பிரித்து பார்க்கும் போக்கு.இதற்கும் சித்திரவதைக்கும் என்ன சம்மந்தம் என்று யோசித்தீர்களானால், மௌரிய பேரரசன் அசோக சக்ரவர்த்தியின் கதையை ஒரு தரம் நினைவு கூர்ந்து பாருங்கள்……அவன் கலிங்கத்திற்கே போகாமல் வெறுமனே தன் தளபதியை அணுப்பி, “வெற்றியுடன் வா” என்று சொல்லி வைத்தான். தலைவனின் ஆணைபடி செயல் பட்ட அந்த படை தளபதி, தன் சொந்த அறிவையோ, தயவு, தாட்சன்யமோ இல்லாமல் கலிங்கர்கள் அனைவரையும் சகட்டு மேனிக்கு போட்டு தாக்கியதில், மௌரிய படைகள் எளிதில் வெற்றி பெற்றார்கள். அதற்கு அப்புறம் தான் அசோகன் அந்த ஏரியா பக்கமே வந்தான். வந்தவன் போர்களத்தில் குத்துயிரும் கொலை உயிருமாய் அங்கஹீனமாய் விழுந்து கடந்த கலிங்க வாலிபர்களை கண்டதும், “சே, இதற்கு தானா ஆசைபட்டாய் அசோகா நீ?” என்று உடனே சோகமாகி, அடுத்த நாளே பௌதம் தழுவி, சாம்டாட் அசோகாவிலிருந்து, சமத்துவ அசோகனாய் மாறினானே, ஏன்?ஏன் என்றால் (1) மனிதர்களும் வானர இனம் என்பதால் அவர்களுக்குள்ளும் தலைவன், தொண்டன் என்ற ஏற்றத்தாழ்வான ஆளுமை நிலைகள் social hierarchy உண்டு. இந்த ஆளுமை நிலைகளுக்கு உட்பட்டு தான் மனிதர்கள் எப்போதுமே செயல் படுகிறார்கள்.(2) தலைவன் அந்த இடத்தில் இல்லாவிட்டாலும் அவன் ஆணைபடி நடக்கும் தொண்டர் குணம் மனிதர்களுக்கும் உண்டு என்பதால் தலைவனின் ஆணைபடி காரியம் செய்யும் போது தன் சொந்த அபிப்ராயத்தையும் நியாய தர்மங்களையும் அச்சமையத்திற்கு மறந்தே போய்விடும் கைபாவை தன்மை ஏற்பட்டுவிடுகிறது. அதனால் தன் எதிரில் “போதும் என்னை விட்டுடு, நான் சோத்து போயீட்டேன், ஒத்துக்குறேன், ஆளை விடு” என்று மிருங்களுக்கே புரியும் சிக்னலை கொடுத்தாலும், இந்த மனிதர்கள் அதை கண்டு கொள்வதில்லை. காரணம், சுயமாய் யோசிக்கும் தன்மையை தான் அவர்கள் இழந்து விட்டார்களே. அதனால், “சரண்டர் சிக்னலை பார்த்தால் சண்டையை நிறுத்திவிடு” என்கிற விதியையும் இவர்கள் மீறிவிடுகிறார்கள். அவர்கள் அந்த விதியை மீறுவதை தலைவன் ஒருவன் மட்டும் தான் சுட்டிக்காட்டி, “ஸ்டாப்” சிக்னலை கொடுக்க முடியும். அந்த தலைவன் அந்த ஏரியாவிலேயே இல்லை என்றால், அவனால் இந்த சண்டையில் குறிக்கிட முடியாமல் போய்விடும்.(3) ஒரு வேலை தலைவன் அந்த இடத்திலேயே இருந்து தொலைத்தாலும், அவனை சரியாக எடை போட்டு அவன் தேறுவானா மாட்டானா, அவன் சொல்படி நடக்கலாமா கூடாதா என்று யோசிக்கும் தன்மையை மனிதர்கள் இழந்து விடுகிறார்கள். அதனால் தான் ஆட்டு மந்தைமாதிரி முதல் ஆடு என்ன சொன்னாலும், செய்தாலும், ஏன் எதற்கு என்று சுய அறிவை பயன் படுத்தி எதிர் கேள்வி கேட்காமல், அப்படியே அடிபிரளாமல் காபி அடித்து, தலைவன் துன்புறுத்தினால் தானும் அப்படியே துன்புறுத்தி ஆன வேண்டும் என்று நினைத்து விடுகிறார்கள்(4) தன் இனத்தை சேர்ந்தவர் (in group) என்றால் தன்னை போலவே அவருக்கு எல்லா உரிமைகளும் ஏற்பட்டுவிடுமே. இப்படி சமமான மனிதர் என்று அங்கீகரித்து விட்டால், அப்புறம் அந்த நபருக்கும் தனக்கு நிகரான மதிப்பு மரியாதை கொடுத்தாக வேண்டுமே. இப்படி பரந்த மனப்பான்மையாய் இருக்க மனம் வராதவர்கள், என்ன இருந்தாலும் நான் தான் மனித இனம், நீ என்னை மாதிரி இல்லை. அதனால் நீ வேறு (out group). நீ வேறாக இருப்பதினால் உன்னை நான் என்னை மாதிரியே நடத்த வேண்டியதில்லை. அதனால் உன்னை நான் என்ன செய்தாலும் தகும் தான்” என்று தனக்கு தானே ஒரு சால்ஜாப்பை சொல்லிக்கொண்டு, “சப் ஹூமன்” subhuman நிலைக்கு தள்ளப்பட்ட மனிதர்களை வேற்று இனமாக்கி, அவர்களை சித்திரவதை செய்வதை நியாயப்படுத்தி விடுகிறார்கள். இதற்கு நல்ல உதாரணமாக ராணுவங்களைச் சொல்லலாம். ஒரு நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த அனைவரும், உட்குழுவாகவும், எதிரி நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த அனைவரும், வெளிக்குழுவாகவும் கருதப்படுவதால் தான் போர் என்ற பெயரால் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் நடக்க காரணமாகின்றன.இப்படி எல்லாம் இன்னொருவரை sub human நிலைக்கு தள்ளி அவரை கஷ்டபடுத்தினால், தன் நிலை ஒங்கும், இதனால் தன்னை கண்டு பிறர் அஞ்சி நடுங்கி, முன்னிலும் நிறைய மரியாதை செலுத்துவார்கள், ”நம்ம பிழைப்பு சுலபமாகிவிடும்” என்று நினைத்துக்கொள்கிறார்கள்.மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் வன்முறை இயல்பாகவே இருக்கிறது. பல மில்லியன் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியின் விளைவாக இன்று நாகரிக சமுதாயமாக மாறியிருந்தாலும், வன்முறை இன்னும் மனதின் அடி ஆழத்தில் படிமமாக இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நாகரீகத்தின் வளர்ச்சியால், இது போன்ற வன்முறை செயல்களை தடுக்க சட்டம், ஒழுங்குமுறை என மனித சமுதாயம் தனக்குள் ஒரு கட்டுபாட்டை வகுத்துக் கொண்டது. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகள், உட்குழுவுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் பொதுவாக கருதப்படுவதால், தனது குழுவைச் சேர்ந்தவர்கள் மேல் வன்முறையை பிரயோகிக்கக் கூடாது என்றும், வெளிக்குழுவை சேர்ந்தவர்கள் மேல், தனது குழுவை பாதுகாக்கவும், தனது அதிகாரத்தை நிலைநாட்டவும், வன்முறையை பிரயோகிக்கலாம் என்றும் சராசரி மனிதர்கள் நினைக்கிறார்கள்ஆனால் விசித்திரமான விஷயம் என்னவென்றால், இப்படி பிறரை இம்சிக்கும் இந்த தன்மையை எந்த சமயத்திலும் மனித சமுதாயத்தின் மேலானவர்கள் ஏற்றுக்கொண்டதே இல்லை. தன் சகமனிதனை துன்புறுத்துவது தான் இருப்பதிலேயே ஈனமான செயல் என்று கருதி, அந்த அநியாயம் செய்யும் நபரை ஒதுக்குகிறார்கள். அதுமட்டுமல்ல, தன்னால் பிறர் துன்பப்படுட்டதை கேள்வி பட்டாலோ, நேரில் பார்த்தாலோ, உடனே அதற்காக வருந்துபடி தான் இயற்கை மனித மனதை அமைத்திருக்கிறது.இந்த அமைப்பை மீறி, யாராவது பிறர் துன்புருவதை பார்த்து சந்தோஷப்பட்டால், அதை ஒரு மனகோளாறாகவே கருதுகிறது மனநலமருத்துவத்துறை. இந்த கோளாறை, antisocial personality disorder, psychopathic personality என்றெல்லாம் பெயரிட்டு, அதற்கு வைதியமும் செய்ய வழிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.துரதுஷ்டவசமான சில சந்தர்பங்களில் தலைமை பதவி வகுக்கும் மனிதனுக்கு இப்படி ஒரு மனகோளாறு நேர்ந்திருந்தால் அதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளை கற்பனை செய்து பாருங்களேன், அட கற்பனை கூட செய்ய வேண்டாம், அடால்ஃப் ஹிட்லரை ஒரு முறை நினைத்து பார்த்தாலே போதுமே. இப்படி தலைவன் கொடூரமனநிலைகாரனாக இருந்து, அவன் தொண்டர்கள் “கண்மூடித்தனமாக கீழ்படிந்திருந்தால்“ (Blind obedience) என்ன ஆகும் என்பது ஹிட்லரின் உபயத்தால் நம் அனைவருக்கும் இன்று தெரியும். இருந்தாலும், இன்னும் நமக்குள் இனம் கண்டுபிடிக்கப்படாத பல ஹிட்லர்களும், சுயமாய் யோசிக்காமல் அடிமைமனநிலையில் கண்ணை மூடிக் கொண்டு, தனக்கு வரும் உத்தரவுகளுக்கு கீழ்படியும் இயந்திரங்காய் அவர்களுக்கு சில பணியாள்கள் கிடைத்துவிடுவதால் தான் இன்னும், இனபடுகொலைகளும், அதிகார துஷ்பிடயோகங்களும், சித்திரவதைகளும், இம்சைகளும் தொடர்கின்றன.இதை எல்லாம் தடுக்கவே முடியாதா? இப்படியே இருந்தா எப்படி? என்று நீங்கள் யோசித்தால், ஒன்றை கவனியுங்கள்: வளர்ந்த நாடுகளான, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, போன்ற நாடுகளில், சித்திரவதை குறித்த புகார்கள் மிகக் குறைவு. இது போன்ற புகார்கள் வந்தாலும், நடவடிக்கைகள் மிகக் கடுமையாக இருப்பதாலும், இது போன்ற புகார்களை விசாரிக்கவென்று சிறப்பான கட்டமைப்பு வசதிகளை வைத்திருப்பதாலும், இந்தக் குற்றங்கள் மிகக் குறைவான அளவிலேயே நடக்கின்றன.1991ல் அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை உதாரணமாக கூறலாம். 1991 மார்ச் 3 அன்று, லாஸ் ஏஞ்சலிஸ் காவல்துறையைச் சேர்ந்த 4 காவல்துறையினர், ராட்னி கிங் என்ற ஒரு கருப்பரை, லத்தியால் கடுமையாக ஒரு பொது இடத்தில் வைத்துத் தாக்கினர். இந்த தாக்குதலை அருகில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து ஜார்ஜ் ஹாலிடே என்பவர், வீடியோ எடுத்தார். அந்த வீடியோ, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதும், அமெரிக்காவே கொந்தளித்தது.அமெரிக்க நீதிமன்றத்தில் அந்த நான்கு காவல்துறை அதிகாரிகள் மீதும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டு, வழக்கு நடந்தது. வழக்கின் இறுதியில், 1992ம் ஆண்டு அந்த நான்கு அதிகாரிகளும், விடுவிக்கப் பட்டனர்.இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து மே மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெரும் கலவரம் மூண்டது. மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்த இந்தக் கலவரத்தில், 53 பேர் இறந்தனர். 2383 பேர் காயம் அடைந்தனர். இந்தக் கலவரத்தை தொடர்ந்து, இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப் பட்டு, தாக்குதலில் சம்பந்தப் பட்ட 4 போலீஸ் அதிகாரிகளில் இருவருக்கு தலா 30 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப் பட்டு தீர்ப்பளிக்கப் பட்டது.இதைப் போலவே வளர்ந்த உலக நாடுகள் அனைத்திலும், ~பதில் சொல்லி ஆகணும்~ என்கிற இந்த Accountability ரொம்பவே கடைபிடிக்க படுகிறது. இந்த பொறுப்புகளை கண்காணிக்க அமைப்புகள் ஏற்படுத்தப் பட்டு, இந்த அமைப்புகளை, மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் கண்காணிக்கும் வண்ணம் திட்டங்கள் வகுக்கப் பட்டு செயல்படுத்தப் படுகின்றன.ஆனால் இந்தியா போன்ற ஜனதொகை வீக்கம் அதிகமான வளரும் நாடுகளில் இப்படி எந்த தார்மீக நடவடிக்கையும் எடுக்கபடுவதில்லை. சட்டதிட்டங்களும், கையேடுகளும் இருந்தாலும், அவை நடைமுறையில் பின்பற்றபடுவதில்லை. காரணம் இங்கு தனி மனிதனின் உரிமையையோ மானத்தையோ பாதுகாக்க யாருக்கும் பெரிய அக்கறை இல்லை. ஆனால் இந்த நிலை நீடித்தால் இந்தியா மாதிரியான நாடுகள் உலக தரத்திற்கு உயரவே முடியாதென்பதால், மற்ற எல்லா நாகரீக நாடுகளை போல இந்தியாவும், எல்லா மனிதர்களையும் கவுரவமாக நடத்தி, வன்முறை, சித்திரவதை மாதிரியான சம்பவங்கள் எங்கு நடந்தாலும் அதை தடுத்து, தட்டிகேட்டு, நியாயம் வழங்க தயாராவது அவசியம்.தட்டிகேட்பதும், நியாயம் வழங்குவதும், காவல் துறைக்கும், சட்டதுறைக்கும் உரித்தான விஷயங்கள், ஆனால் தடுத்து காப்பது, மனநலமருத்துவத்தின் பணி தானே. சிறு வயது முதலே குழந்தைகளுக்கு மனித நேயம், பிறரை தன்னை போல பாவித்து விட்டு கொடுத்து, அன்பு செலுத்தும் போக்கு, எந்த பிரச்சனையானால் வன்முறையில் ஈடுபடாமல் பேசி தீர்த்துக்கொளும் மக்கட்பண்பு, எந்த வித்தியாசம் இருந்தாலும், எல்லா மனிதர்களும் சமமே, அவர்கள் எல்லோரையுமே ‘ingroup’பாய் பார்க்கும் மனப்பாண்மை என்று மேம்பட்ட மனங்களை வளர்த்தால், எதிர்காலத்தில் இந்த வன்முறை குணங்கள் தலை தூக்காமல் தடுக்க முடியும். ஆனால், இப்போதைய பாடத்திட்டங்களோ இது பற்றி எதுவுமே கண்டுக்கொள்ளாமல், மனப்பாடத் தகுதிகளை மட்டுமே வளர்த்து, ரேசில் ஓடும் குதிரைகளை போல சம்பாதிக்க மட்டுமே பிள்ளைகளை ஊக்குவிக்கிறது. இத்தகைய போட்டி மனப்பான்மைதான், வளர்ந்து பெரிய மனிதர்கள் ஆன பிறகும் கூட, தொடர்ந்து சுயநலமாய் சிந்தித்து, கொடூரங்களை செய்ய தூண்டுகிறது. இந்த நிலை மாற வேண்டுமானால் முதலின் நம் பாடதிட்டங்களை மக்கட்பண்புக்கு முதலிடம் கொடுப்பதாக மாற்றி அமைக்க வேண்டும்.இத்தனை முன் எச்சரிக்கைகளையும் மீறி வன்முறை குணம் தலை தூக்கினால், அதை ஒரு கோளாறு என்பதை புரிந்துக்கொண்டு அதற்கு தகுந்த மனவைத்தியத்தை துரிதமான ஆரம்பித்தல் அவசியம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment