நம்மை சுற்றி ஒருவர் மிகப்பெரிய விஷயங்களை சத்தமே இல்லாமல் செய்து கொண்டிருப்பார். அவர் அப்படி சாதிக்கிற பொழுது கூடவே இன்னொருவர் அதைவிட கொஞ்சம் கூடுதலான பணியை செய்திருப்பார், இறுதியில் இந்த முதல் நபர் கவனத்துக்கு வராமலே போய்விடுவார். அந்த இரண்டாவது நபருக்கான இடத்தை நிறைய பேர் மாறிமாறி பெற்றுக்கொண்டே இருப்பார்கள். எப்பொழுதுமே தன் வேலையை எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் செய்யும் அந்த முதல் ஆள் மட்டும் மாறியிருக்க மாட்டார். அவர் ஒரு நாள் போதும் சாமி என்று கிளம்புகிற அன்று தான் அவர் எப்படிப்பட்ட மகத்தான அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார் என்று புரியும். காலிஸ் தான் அந்த நாயகன். லாரா,சச்சின்,பாண்டிங்,திராவிட் முதலிய வீரர்கள் ஆடிய காலத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகியவற்றில் கலக்கிய இவர் இறுதியில் ஓடி முடிக்கிற பொழுது அவர்கள் மூவரை விட டெஸ்டில் அதிக சராசரி உடையவராக இருந்தார் ! மழையால் பாதிக்கப்பட்ட அவர் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் பன்னிரெண்டு பந்துகளை சந்தித்து வெறும் ஒரு ரன் அடித்த காலிஸ் அடுத்த ஐந்து டெஸ்ட்களில் எட்டு ரன்கள் என்கிற சராசரியையே கொண்டிருந்தார். நடுவில் ஒரு மூன்று விக்கெட் மட்டும் கழட்டினார். இந்த பையன் தேறமாட்டான் என்று முடிவு கட்டிவிட்டார்கள் கிரிக்கெட் மேதைகள். தோல்வியின் விளிம்பில் பாக்ஸர் டெஸ்ட் போட்டியில் மெல்பர்னில் அணி நின்று கொண்டிருந்த பொழுது கடைசி நாள் ஒற்றை ஆளாக மெக்ராத் மற்றும் வார்னே முதலியோரை சமாளித்து ஆடி சதமடித்து போட்டியை டிரா செய்த பொழுது தான் அசந்து போனார்கள். ஸ்லிப்பில் கச்சிதமாக கேட்ச் பிடிப்பது ஆகட்டும்,பீல்டிங்கில் பாய்ந்து பிடிப்பது ஆகட்டும் காலிஸ் கலக்கி எடுப்பார். எதிரணியை முன்னணி பந்து வீச்சாளர்களால் எதுவும் செய்யமுடியவில்லையா ? காலிஸ் அழைக்கப்படுவார். பந்தை முன்னாடி வந்தோ,பின்னோக்கி நகர்ந்தோ அடிக்க முடியாத மாதிரி கச்சிதமாக லைனில் பந்து அவரால் வீசப்பட்டு ரன்கள் கட்டுப்படும். முன்னணி பந்துவீச்சாளர்கள் வந்து விக்கெட்களை கழட்டுவார்கள். இவர் தனக்கு கொடுக்கப்பட்ட காரியத்தை செய்து முடித்த திருப்தியோடு நிற்பார். டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் ஆட்டம் இரண்டில் பத்தாயிரம் ப்ளஸ் ரன்கள் கூடவே இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட விக்கெட்களை எடுத்த ஒரே வீரர் காலிஸ் மட்டும்தான். ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தில் தொடர்ந்து இருந்தாலும் அதற்கான எந்த சுவடும் அவரிடம் தெரியவே தெரியாது. காலிஸ் ஏதேனும் போட்டியில் சதம் அடித்தால் அந்த போட்டியில் தென் ஆப்ரிக்க தோற்பது அரிதிலும் அரிதாகத்தான் நிகழும். நாற்பத்தி ஐந்து முறை டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்திருக்கும் காலிஸ் அவ்வாறு சதம் அடித்த முப்பது தருணங்களில் அவரைவிட அதிகமான ஸ்கோர் வேறொருவரால் அடிக்கப்பட்டு இருக்கும். காலிஸ் கவனிக்கப்படாமல் போவார். இந்தியாவுடன் கேப்டவுனில் நடந்த போட்டியில் வெற்றியின் விளிம்பில் இந்திய அணி தென் ஆப்ரிக்காவில் தொடரை முதல் முறை கைப்பற்றி சரித்திரம் படைக்க காத்துக்கொண்டு இருந்தது. காலிஸ் உடைந்த விலா எலும்போடு இறுதி நாளில் 109 ரன்கள் அடித்து வெற்றியை தடுத்தார். அது போதாது என்று தன்னுடைய இறுதி டெஸ்ட் போட்டியில் சதமடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். அப்பொழுதும் எப்பொழுதும் போல மெல்லிய சிரிப்பு என்ன கூடுதலாக நின்றபடி மரியாதை செலுத்தும் சகாக்கள் மற்றும் ரசிகர்களுக்காக சில துளிக்கண்ணீர். அற்புதமாக பந்துவீசி,பேட்டிங் செய்து விறுவிறுப்பாக பீல்டிங் செய்யும் காலிஸ் அவ்வளவாக காயமடைய மாட்டார். அடுத்த உலகக்கோப்பையிலாவது அணிக்கு கோப்பை பெற்றுத்தந்துவிட வேண்டும் என்று ஆசையோடு காத்துக்கொண்டு இருந்த அவர் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் வரிசையாக .0,1 மற்றும் 4 என்று ஸ்கோர்கள் வரவே போதும் இதோடு என்று முடிவு செய்துகொண்டார். “உலகக்கோப்பை என்பது எட்ட முடியாத பாலம் என்று எனக்கு புரிந்துவிட்டது. விடைபெறுகிறேன் !”என்று கிரிக்கெட் கண்ட ஆகச்சிறந்த ஆல்ரவுண்டர் தன்னடக்கத்தோடு விடை பெற்றுக்கொண்டார். மிகப்பெரிய அளவில் கோப்பைகளை வெல்லாத சொதப்பல் அணியாக இருக்கும் தென் ஆப்ரிக்கா வென்ற வில்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் காலிஸ் வீழ்த்திய விக்கெட்கள் ஐந்து ! தென் ஆப்ரிக்கா என்கிற அணியை உச்சத்தில் வைக்க காரணமாக இருந்த அவரின் அடுத்த இலக்கு என்ன என்று கேட்ட பொழுது ,”கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மீண்டும் ஐ.பி.எல் கோப்பை வெல்ல உதவ வேண்டும் !” என்றார். லாரா சொன்ன வரிகளை விட சிறந்த சமர்ப்பணம் இருக்க முடியாது :”என் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள யாரேனும் ஒருவரை பேட்டிங் செய்ய வைக்க வேண்டுமென்றால் நான் திராவிட் அல்லது காலிசையே தேர்வு செய்வேன் !”. தன்னை பத்தொன்பது வருடங்களாக ஆட்டத்தை தவிர வேறெங்கும் வெளிப்படுத்திக்கொள்ள மறுத்த அற்புதம் அவர்.
No comments:
Post a Comment