
R Muthu Kumar அண்ணனின் எழுத்தில் சஞ்சய் காந்தி வாழ்க்கை வரலாற்றை வாசித்து முடித்தேன். ஒரு முப்பத்தி ஐந்து வயதுக்குள் சஞ்சய் காந்தி இந்திய அரசியல் களத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகளை நூலை வாசிக்கிற பொழுது நம்மாலும் உணர முடிகிறது.பெரோஸ் காந்தியை விட்டு நேருவுக்கு உதவியாக இருக்கும் பொருட்டு இந்திரா விலகி இருந்த காலங்களில் தந்தையின் பாசம் கிட்டாமல் அம்மாவின் செல்லத்தில் வளர்கிற பிள்ளையாகவே சஞ்சய் இருந்தார். பள்ளியில் மந்தமான மாணவனாக இருந்த அவர் அரிதிலும் அரிதாக கூட பிரகாசமான எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை. டூன் பள்ளியில் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த பிள்ளையை ராஜீவை பிரிய நேர்ந்த பொழுது வேறொரு பள்ளிக்கு மாற்றி அடிக்கடி பார்க்கிற பாசக்கார அம்மாவாக இந்திரா இருந்தார். உண்மையில் செல்லம் கொடுத்து கெடுக்கிற அம்மாவாக இருந்தார்.அவரின் பெயர் கார் திருட்டில் அடி பட்ட பொழுதும் சரி,கல்லூரியே போகாமல் இங்கிலாந்தில் ரால்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் பயிற்சிக்கு போன இடத்தில் அடிக்கடி காரை விதிகளை மீறி ஒட்டி போலீஸ் வசம் போன பொழுதும் இந்திராவின் அதிகாரமே சஞ்சயை காப்பாற்றியது. கார் மெக்கானிக் ஒருவரின் நட்பால் அரைகுறையாக தெரிந்திருந்த கார் அறிவோடு மலிவு விலை கார் தயாரிக்கிறேன் என்று கிளம்பினார் சஞ்சய். பல்வேறு கம்பெனிகள் கலந்து கொண்ட போட்டியில் உள்நாட்டு பொருட்களை கொண்டே கார் தயாரிப்பு இருக்கும்,ஆறாயிரம் சொச்சம் மட்டுமே விலை என்கிற உறுதியோடு ஒப்பந்தம் பெற்றார் அவர். ஐந்து கார்கள் கூட அதிலிருந்து ஒழுங்காக வெளியே வரவில்லை. விலையை பத்தாயிரம் தாண்டி ஏற்றினார். கூடவே ஹரியானாவில் அரசாங்க நிலம் மலிவு விலையில் அவரின் தொழிற்சாலைக்கு தரப்பட்டது. அதற்கு மேல் ஒன்றுமே உற்பத்தி செய்யாத அவருக்கு எழுபத்தி ஐந்து லட்சம் ருபாய் கடனை வங்கிகள் அள்ளித்தந்தன. எல்லாம் இந்திரா ஆசிகள். ரிசர்வ் வங்கி சஞ்சய் கம்பெனிக்கு கடன் தரக்கூடாது என்று உத்தரவு போடுகிற அளவுக்கு சலாம் போட்டார்கள். கார் தயாரிக்கிறேன் என்று சொன்ன நிறுவனத்தை கொண்டு சஞ்சய் தன் காலத்தில் தயாரித்தது சாலை உருளைகள் மட்டும் தான்.எமர்ஜென்சி அலகாபாத் தீர்ப்பால் கொண்டு வந்தார் இந்திரா. டெல்லியை சுத்தப்படுத்துகிறேன் ஏழைகளின் சிக்கல்கள் குடிசைகளில் இருக்கிறது என்று சொல்லி பல்லாயிரக்கணக்கான குடிசைகள் தரைமட்டம் ஆகின. அதை எதிர்த்த அப்பாவி முஸ்லீம்கள் நூற்றி ஐம்பது பேர் துர்க்மான் கேட்டில் துப்பாக்கிக்கு பலியானார்கள். குடும்ப கட்டுப்பாடு நாட்டுக்கு நல்லது என்று சொல்லி வாரத்துக்கு ஆயிரம் என்கிற அளவுக்கு அள்ளிக்கொண்டு போய் குடும்ப கட்டுப்பாடு செய்தார்கள். எழுபத்தி ஐந்து ரூபாய்,ஒரு டின் நெய் என்று மக்களை ஆசை காட்டி பல லட்சம் பேரை இந்த திட்டத்துக்குள் தள்ளினார்கள். கல்யாணமாகாத இளைஞர்கள்,விருப்பமில்லாதவர்கள் எல்லாரும் அள்ளிக்கொண்டு போய் கத்தரிப்புக்கு உள்ளானார்கள். அதை எதிர்த்து முசபார்நகரில் போராடிய எளியவர்கள் முப்பது பேர் துப்பாக்கிகளுக்கு மீண்டும் பலியானார்கள். ஐ.ஏ.எஸ் அதிகார்கள் அவருக்கு முழு ஏவல் செய்கிற அற்புதத்தை துளி முணுமுணுப்பு இல்லாமல் செய்தார்கள்.இளைஞர் காங்கிரஸ் என்கிற பெயரில் மாமூல் பெறவும்,பொறுக்கித்தனம் செய்யவும் நிறைய பேர் பழகிக்கொண்டார்கள். அதே போல கட்சியிலும் சஞ்சய்க்கு சாமரம் வீசியவர்கள் மட்டுமே நிலைக்க முடிந்தது.தேர்தல் வந்தது. ஓயாமல் பிரச்சாரம் செய்த சஞ்சய் எழுபத்தி ஏழாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்று இருந்தார். அமேதிக்கு உட்பட்ட ஐந்து சட்டசபை தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்று இருந்தாலும் இவரை மட்டும் மக்கள் தோற்கடித்து இருந்தார்கள். “கழுதை நின்றால் கூட சஞ்சய்யை தோற்கடித்திருக்கும் என்கிற அளவுக்கு சஞ்சயின் புகழ் பரவி இருந்தது. ஜனதா அரசு வழக்குகள் போட்டது. டெல்லி ஆளுநர் கிஷன் சந்த் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்,இவரின் மாமனார் மர்மமான முறையில் இறந்து போனார். எல்லாம் சஞ்சயை காக்க என்று ஊர் சொன்னது. அடுத்த தேர்தலில் சஞ்சயின் ஆதரவாளர்கள் நூற்றி ஐம்பது பேர் வென்றிருந்தார்கள். விமானம் ஒட்டுகிறேன் என்று கிளம்பிய அவர் மண்டை நொறுங்கி இறந்து போயிருந்தார். நாடு ஓரளவுக்கு தப்பித்ததுகிழக்கு வெளியீடுபக்கங்கள் :142விலை : நூறு
No comments:
Post a Comment