Search This Blog

Wednesday, September 3, 2014

தாத்தா ரெட்டைமலை சீனுவாசன்


அண்ணல் அம்பேத்கர்,ஜோதிராவ் புலே ஆகிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளில் அயராது செயலாற்றியவர்கள் வரிசையில் உச்சரிக்கப்படவேண்டிய முக்கியமான பெயர் ரெட்டைமலை சீனுவாசன் அவர்கள். தாத்தா என்று அன்போடு அழைக்கப்படும் அவர் செங்கல் பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் கோழியாளம் எனும் கிராமத்தில் 7.7.1859 ஆம் ஆண்டு பிறந்தார். கோவையில் தன்னுடைய இளங்கலை படிப்பை படித்து முடித்து கல்வி என்பது மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை தரும் முகமாக மாறினார். கல்வி பயின்ற காலத்தில் அவரின் உறவினரான அயோத்திதாச பண்டிதரின் வீட்டில் தங்கியிருந்தார். அங்கே தன் மக்களுக்கு ஓயாது உழைக்க வேண்டியதன் அவசியம் அவருக்கு இன்னமும் தீவிரமாக புரிய ஆரம்பித்தது. ஊட்டியில் கணக்கராக பணியாற்றிக்கொண்டிருந்த அவர் தன்னுடைய பணியை துறந்து தன் மக்களின் அவலங்கள் போக்க களம் புகுந்தார். தன்னுடைய சமூகம் பழம்பெருமை உள்ளது,அதனுடைய சமத்துவம் எப்படி காலப்போக்கில் பிடுங்கப்பட்டு அவர்கள் ஒடுக்கப்பட்டார்கள் என்பதை வரலாற்று குறிப்புகள்,கல்வெட்டுகள்,அரசாங்க குறிப்புகள் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தினார். அதற்கு தான் நடத்திய பறையன் இதழை பயன்படுத்திக்கொண்டார். அவர் நடத்திய பறையர் மகாஜன சபையின் மூலம் விவசாயம் செய்ய நிலங்கள்,பஞ்சமி நில மீட்பு,கல்வி நிலையங்களில் இடம்,பட்டாக்கள் ஆகியவற்றை சாதித்தார். 1896 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு தங்களுடைய உரிமைக்கான நியாயத்தை எடுத்துரைக்க கப்பலில் கிளம்பி பயணம் போன பொழுது உடல்நலக்குறைவால் நேட்டாலில் தங்கி அரசாங்க மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். அங்கே வந்த காந்தியடிகளுக்கு தமிழ் சொல்லித்தந்து அவரை தமிழில் கையெழுத்து இடவும் செய்தார். காந்தி திருக்குறளை கற்கவே அவரிடம் தமிழ் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிக்கட்சியில் இணைந்த அவர் சென்னை சட்ட சபையில் பொதுச்சாலைகள்,கிணறுகள்,கட்டிடங்கள்,பொதுவிடங்கள் ஆகியவற்றில் ஒடுக்கப்பட்ட மக்கள் நுழைய இருந்த தடையை சட்டரீதியாக நீக்க சட்டங்கள் கொண்டு வந்து சாதித்தார். 1920 ல் வந்த லோக்கல் போர்ட் சட்டத்தை திருத்தி பொதுவிடங்களில் ஒடுக்கப்பட்ட மக்களை நுழைய மறுப்பவர்களுக்கு நூறு ருபாய் அபராதம் என்று மாற்றம் கொண்டு வந்தார். 1930 ல் நடந்த வட்டமேசை மாநாட்டில் அவரோடு கைகுலுக்க ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முயன்ற பொழுது ,”நான் அடிமைகளின் அடிமை ; தீண்டத்தகாதவன் !” என்று குரல் எழுப்பி தங்களின் நிலையை அவையோருக்கு புரிய வைத்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் திராவிட இனத்தவர் அவர்கள் இந்து கட்டமைப்புக்குள் வர மாட்டார்கள் என்பது அவரின் உறுதியான பார்வையாக இருந்தது. ஆங்கிலேய ராசு திவான் பகதூர்,ராவ் பகதூர் முதலிய பட்டங்களை வழங்கிய பொழுது அவர் இறப்பதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னால் திராவிட மணி என்ற பட்டம் தமிழ் தென்றல் திரு.வி.க. முன்னிலையில் வழங்கப்பட்டது. அந்நிகழ்வுக்கு இராஜாஜி தலைமை தாங்கினார்அவரின் மனைவி அரங்கநாயகி இறக்கிற பொழுது தன்னுடைய அற்புதமான கணவரிடம் அவர் என்ன கேட்டார் தெரியுமா ?”நம் மக்களுக்கு உரிமை வழங்கிய அந்த சட்டத்தின் வரிகளை என் கல்லறையின் மீது எழுப்பப்படும் நினைவுச்சின்னத்தில் பொறியுங்கள் !” என்று. அப்படியே அந்த சட்டத்தின் வாசகங்களை தாத்தா ரெட்டைமலை சீனுவாசன் பதித்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட வரலாறு என்பதில் தனித்த நாயகனாக அவர் திகழ்கிறார் என்றால் மிகையில்லை

No comments:

Post a Comment