கார்ல் லேண்ட்ஸ்டேயினர் ரத்த வகைகளை கண்டறிந்த அற்புத மருத்துவர், ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுதே தந்தையை இழந்த இவர் அன்னையின் அரவணைப்பில் வளர்ந்தார். மருத்துவம் பயின்ற பின்னர் அவர் உயிரிவேதியியல் துறையில் தன்னுடைய ஆர்வத்தை திருப்பினார். நாம் உண்ணும் உணவு எப்படி நம்முடைய ரத்தத்தில் இருக்கும் வெவ்வேறு தனிமங்களின் அளவை தீர்மானிக்கிறது என்று ஆய்ந்து சொன்னார்.நோய் எதிர்ப்பியல் மற்றும் ஆண்டிபாடிகள்பற்றியும் தீவிரமாக ஆய்வுகள் செய்தார் அவர். நோய்க்கிருமிகளின் உடற்கூறியல் துறையிலும் ஓயாத உழைப்பை செலுத்திய இவர் நோய் எதிர்ப்புக்கு காரணமான ஹெப்டான்களை கண்டுபிடித்தார்.இவரின் ஆய்வு ஆர்வம் எந்த அளவுக்கு இருந்தது என்பதை ஒரு சம்பவத்தின் மூலம் விளக்கலாம். போலியோ மைலிடிஸ் நோயைப்பற்றி ஆய்வுகள் செய்து கொண்டிருந்த இவர் அந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்த குழந்தைகளின் மண்டையோட்டை அரைத்து குரங்குகளுக்குள் செலுத்திய பொழுது அவையும் அந்நோயால் பாதிக்கப்பட்டன என்பதைக் கண்டார். அதன் மூலம் நோய் எதிர்ப்பியலை எப்படி அந்நோய்க்கு எதிராக வளர்ப்பது என்று ஆய்வுகள் செய்ய முனைந்த அவருக்கு போதுமான குரங்குகள் கிடைக்கவில்லை. ஆகவே, ஆஸ்திரியாவின் வியன்னா நகரைவிட்டு நீங்கி பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகர பாஸ்டர் ஆய்வகத்தில் ஆய்வுகள் செய்தார்.லெண்டாயிஸ் எனும் அறிவியல் அறிஞர் 1875 ஆம் ஆண்டு பிற பாலூட்டிகளின் ரத்தத்தை மனிதர்களுக்கு செலுத்தினால் அவை ரத்த குழாய்களில் அடைத்துக்கொள்வதொடு மட்டுமல்லாமல்,ரத்த செல்கள் வெடித்து ஹீமோகுளோபின் வெளியேறுவதை கண்டார். இந்த ஆய்வை மேலும் முன்னெடுத்த லேண்ட்ஸ்டேயினர் மனிதர்களுக்குள்ளும் அப்படி ரத்தம் செலுத்தினால் எதிர்ப்புகள் உண்டாவதை கண்டறிந்து சொன்னதோடு நில்லாமல் வெவ்வேறு ரத்தப்பிரிவுகளே அதற்கு காரணம் என்றும் அறிவித்தார். இந்த ரத்தப்பிரிவுகளை கொண்டு யார் பிறக்கிற பிள்ளையின் பெற்றோர் என்றும் உறுதி செய்ய முடியும் என்றும் அவர் சொன்னார். அவருக்கு இந்த கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. எண்ணற்ற விபத்துகளில் உயிர்கள் காப்பாற்றப்பட காரணமான ரத்த பிரிவை கண்டறிதலை முதன்முதலில் செய்து மனித குலத்துக்கு மிகப்பெரிய தொண்டாற்றிய இவர் என்றைக்கும் நினைவில் கொள்ளப்படவேண்டியவர்.
No comments:
Post a Comment